கதைக்களம்
படத்தின் தொடக்கத்திலேயே அதர்வாவின் திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்று வருகின்றன. அதர்வாவின் தாய் மாமன் நட்டி நட்ராஜ் திருமணத்திற்கான வேலைகளை எடுத்து செய்து வருகிறார். திருமணம் நாளை நடக்கவிருக்கும் நிலையில் மாப்பிள்ளை நண்பர்களுடன் வெளிநாட்டில் உள்ளார்.
உடனடியாக வெளிநாட்டில் இருந்து அதர்வா தனது நண்பர்களுடன் கிளம்பி சென்னைக்கு வருகிறார். வரும் வழியில் விமானத்தில் பகத் பாசிலை பார்க்க, அவரிடம் தன்னுடைய காதலை பற்றி சொல்ல தொடங்குகிறார் அதர்வா.
பள்ளி பருவத்தில் ப்ரீத்தி முகுந்தனை பார்த்த அதர்வா, அவரை காதலிக்க தொடங்குகிறார். டியூஷன் சென்டர், டென்னிஸ் விளையாடும் இடம் என ப்ரீத்தி செல்லும் இடத்திற்குள் அதர்வாவும் செல்கிறார். எப்படியாவது அவளிடம் தன்னுடைய காதலை சொல்ல வேண்டுமென துடிக்கிறார். ஒரு நாள் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அதர்வாவை தனது வீட்டிற்கு ப்ரீத்தி அழைக்கிறார்.
அங்கு சென்ற அதர்வா தனது காதலை சொல்லப்போகும் நேரத்தில், ப்ரீத்தி ஒருவர் அல்ல, இரட்டையர்கள் (Twins) என தெரிய வருகிறது. இதனால், இதுநாள் வரை யாரை காதலித்தோம் என்கிற குழப்பத்திற்கு ஆளாகிறார் அதர்வா. இதனால் ப்ரீத்தியிடம் அவரால் காதலை சொல்ல முடியாமல் போகிறது.
இப்படியே ஆண்டுகள் செல்ல தற்போது சென்னைக்கு வந்துவிடுகிறார் அதர்வா. அங்கு மருத்துவ கல்லூரியில் படித்து வரும் கயாடு லோஹரை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். அவருடன் பேசி பழகுகிறார். ஆனால், தனது காதலை சொல்ல தயங்கிக்கொண்டே இருக்கிறார். கல்லூரி முடிந்து கயாடு தனது சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில், ரயில் நிலையத்தில் தனது காதலை சொல்ல செல்கிறார் அதர்வா. ஆனாலும் அவரால் காதலை சொல்லவே முடியவில்லை.
இப்படி தான் நேசித்த பெண்களிடம் காதலை சொல்லாமல் தவிக்கும் அதர்வா, இறுதியில் காதலை சொன்னாரா அல்லது தனக்காக தன் மாமா பார்த்து வைத்துள்ள பெண்ணை திருமணம் செய்துகொண்டாரா என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் எடுத்துக்கொண்ட கதைக்களமும் அதை சுற்றி அமைத்த விஷயங்களும், சர்ப்ரைஸ்களும் மிகவும் அழகாக இருந்தன. ஆனால், திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை. படத்தின் தொடக்கம் சிறப்பாக இருந்ததாலும், அதன்பின் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. இதுவே இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக மாறியுள்ளது.
கதாபாத்திரங்களின் எமோஷனுடன் நம்மால் சுத்தமாக கனெக்ட் ஆகவே முடியவில்லை. குறிப்பாக அதர்வா காதலை சொல்லிவிடுவாரா இல்லையா என்கிற இடத்தில் நாமும் அந்த பதட்டத்தை உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியொரு பதட்டத்தை எந்த ஒரு காட்சியமைப்பும் நமக்கு தரவில்லை. அதேபோல் பல இடங்களில் நமக்கு சலிப்பு ஏற்படும் வகையில் எடிட்டிங் இருந்தது. ஆறுதலாக அமைந்த விஷயம் என்று சொன்னால் அது பகத் பாசில் கதாபாத்திரம் தான். கிளைமாக்ஸில் அவருடைய கதாபாத்திரம் படத்தை ஓரளவு காப்பாற்றியது.
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு இன்னும் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. அதர்வா, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு ஆகியோரின் கதாபாத்திரங்கள் தான் படத்தை முழுமையாக கொண்டு செல்கிறது. அவர்களுக்கு காதலில் ஏற்படும் வலிகளை திரையின் மூலம் நமக்கு இன்னும் வலுவாக கடத்தியிருந்தால், சுவாரஸ்யமாக இருந்திருக்கும். ஆனால், அது நடக்கவில்லை என்பதே மிகப்பெரிய வருத்தம் தான்.
ஆனால், அதர்வா, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் எந்த குறையும் இல்லை. அதே போல் சுதாகர் படத்தில் பட்டையை கிளப்பிவிட்டார். ரக்ஷன், தமன், நிஹாரிகா, டிராவிட், ஏஞ்சலின், ஜோனிடா காந்தி ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. மேலும் பல பிரபலங்களின் சர்ப்ரைஸ் என்ட்ரியும் நன்றாக இருந்தது.
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் என்றால் அது, இசையமைப்பாளர் தமனின் இசை தான். நடிப்பில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்றாலும், இசையால் படத்தை காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை தரமாக உள்ளது. இவருடைய பாடல்களை தவிர்க்க Reference-க்காக வைக்கப்பட்ட கிளாசிக் பாடல்களுக்கும் கவனம் ஈர்க்கப்பட்டது. நகைச்சுவை காட்சிகள் நமக்கு ஆறுதல் அளிக்கின்றன.
ஒளிப்பதிவு மிகவும் கலர்புல்லாக இருந்தது. வெளிநாடாக இருந்தாலும், 90ஸ் காலகட்டத்தை காட்டிய போதும் ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக இருந்தது. .
RATING - 4/5
Post a Comment